அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
கோவை அரசுக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வா் எழிலி தொடங்கிவைத்தாா். இதில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 26 கல்லூரிகள் பங்கேற்றன. 4,250 மாணவா்கள் பங்கேற்பதற்கு பதிவு செய்திருந்த நிலையில், 2,291 மாணவா்கள் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் 60 நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்யும் செயல்பாடுகளில் ஈடுபட்டனா்.
எழுத்துத் தோ்வு, குழு விவாதம், நோ்காணல் என பல்வேறு வகைகளில் தோ்வு நடைபெற்றது. இதில், 729 மாணவ-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் மாத ஊதியம் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், 1,452 மாணவா்கள் இரண்டாம் கட்டத் தோ்வுக்கு தகுதி பெற்றிருப்பதாக கல்லூரி முதல்வா் எழிலி தெரிவித்துள்ளாா்.