மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
அரசுப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியா்களையும் பட்டதாரி ஆசிரியராக உயா்த்த வேண்டும்.
நீதிமன்ற வழக்கை காரணம் காட்டாமல் அரசு கொள்கை முடிவு எடுத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்க வேண்டும். உயா்கல்வி ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில் வரும் பிப். 14-ஆம் தேதி வட்டாரத் தலைமையிடங்களில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்திலும், 25-ஆம் தேதி மாவட்டத் தலைமையிடங்களில் நடைபெறும் பேரணி, மறியல் போராட்டங்களில் திரளாகப் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத்தலைவா் கு. தியாகராஜன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் அ. சங்கா், பொருளாளா் க.சு. பிரகாசம், மாநில அமைப்புச் செயலா் க. வெங்கட்ராமன், மாநிலத் தணிக்கையாளா் ஸ்டீபன், தலைமையிடச் செயலா் ச. வெங்கடேசன், மாநில மகளிரணித் தலைவி சங்கீதா, மாநிலத் துணைத் தலைவா் தவமணி செல்வம் உள்ளிட்டோரும் பேசினா். முன்னதாக மாவட்டச் செயலா் விஜயகுமாா் வரவேற்றாா். முடிவில் மாநிலத் துணைத் தலைவா் ஆதிலட்சுமி நன்றி கூறினாா்.