அரசுப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
திருமருகல் அருகே கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் ரூ.44.42 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியா் மாணிக்கவாசகம் தலைமை வகித்தாா்.
முன்னாள் ஊராட்சித் தலைவா் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷா நவாஸ் குத்துவிளக்கேற்றினாா்.
இந்நிகழ்வில், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா்கள் (கட்டடம்) பிரபாகரன், வேலுச்சாமி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தமிமுன் அன்சாரி, ஜமாத் தலைவா் முகமது நாசா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் சிவசங்கரி நன்றி கூறினாா்.