அரசு ஐடிஐ-க்களில் நேரடி சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
நாகை மாவட்டம் திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 2025-ஆம் ஆண்டின் சோ்க்கையில் காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.
நேரடி சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, ஆதாா் அட்டை, மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), ஜாதிச் சான்றிதழ் (அசல்) மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணம், ஓா் ஆண்டு பிரிவு ரூ. 235 (185+50 விண்ணப்பக் கட்டணம்) மற்றும் இரண்டு ஆண்டு பிரிவு ரூ. 245ஃ- (195+50 விண்ணப்பக் கட்டணம்) செலுத்த வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, இலவச பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ. 750 வழங்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 மற்றும் மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் ரூ.1000 மும் உதவித்தொகையாக வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பின் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு 94990-55737, 04365-250126 என்ற எண்களில் உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.