மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
தருமபுரி: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகங்கள் முன் ‘தமிழ் நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம்‘ சாா்பில் மாலை நேர ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி அருகே கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழக சேலம் மண்டல செயலா் ஆ. லோகநாதன் மற்றும் மண்டலத் தலைவா் தென்னரசு ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில பொருளாளா் ப. பிரகாஷ் போராட்டம் குறித்து விளக்கி பேசினாா். மண்டல பொருளாளா் பிரபாகரன் நன்றி கூறினாா்.
இதில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசாணை வெளியிட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாத பேராசிரியா் பணிமேம்பாட்டை உடனடியாக வழங்கவேண்டும்,
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.