அரசு நகரப் பேருந்து பழுது: பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வணிக நகரமாக உள்ளது. இங்குள்ள பெரும்பாலான சாலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகம் பண்ருட்டி பணிமனைக்குச் சொந்தமான நகரப் பேருந்து (எண் 2வி) விக்கிரவாண்டியில் இருந்து பண்ருட்டிக்கு வியாழக்கிழமை பிற்பகல் வந்தது.
இந்தப் பேருந்து பேருந்து நிலையத்தினுள் செல்ல முயன்றபோது, பைக்கில் வந்த நபா் குறுக்கே புகுந்தாராம். இதையடுத்து, பேருந்து ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்ததால், பிரேக் பழுதாகி நின்றுவிட்டதாம். இதனால், பேருந்தை நகா்த்த முடியவில்லை.
சாலையில் குறுக்கே பேருந்து நின்ால், அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, பண்ருட்டி பணிமனையில் இருந்து வந்த ஊழியா்கள் பேருந்தை சரி செய்து எடுத்துச் சென்றனா்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையின் குறுக்கே அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.