ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல...
20வது இடத்திற்குத் தள்ளப்பட்ட கடலூர்: 94.51% தேர்ச்சி!
நெய்வேலி: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.88 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 19-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம் நிகழாண்டு 20-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்,15-ஆம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். அதன்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
கடலூர் வருவாய் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 246, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 44, தனியார்ப் பள்ளிகள் 148 என மொத்தம் 438 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் 17,044 பேர், மாணவிகள் 15,417 பேர் என மொத்தம் 32,461 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 15,882 பேர், மாணவிகள் 14,796 பேர் என மொத்தம் 30,678 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி விகிதம் 94.51. இதில் மாணவர்கள் 93.18, மாணவிகள் 95.97 சதவீதம்.
கடலூர் மாவட்டத்தின் 2024 தேர்ச்சி விகிதம் 92.63 சதவீதம். நிகழாண்டு (2025) 94.51 சதவீதம். கடந்த ஆண்டைவிட நிகழாண்டு தேர்ச்சி விகிதம் 1.88 அதிகம். ஆனால், 19-ஆவது நிலையிலிருந்து 20-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.79 சதவீதம். 2024 தேர்ச்சி விகிதம் 91.51. கடந்த ஆண்டைவிட 2.28 சதவீதம் அதிகரித்து, 11-ஆவது நிலையிலிருந்து 14-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
100 சதவீதம் தேர்ச்சி
கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 436 பள்ளிகளில் 204 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில், அரசுப் பள்ளிகள் 102, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 11, தனியார்ப் பள்ளிகள் 91 பள்ளிகள் ஆகும்.