போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பண்ருட்டி வட்டம், திருவாமூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் பொன்மாணிக்கவேல் (20). இவா், கடந்த 6.8.2022 அன்று திருவாமூா் மலட்டாறு அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பொன்மாணிக்கவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி லட்சுமி ரமேஷ் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், பொன்மாணிக்கவேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலரேவதி ஆஜரானாா்.