சிதம்பரத்தில் தூய குடிநீா் வழங்கக் கோரிக்கை
சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு தூய குடிநீா் வழங்க வலியுறுத்தி, நகர அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் நகராட்சி ஆணையாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதன்படி, சிதம்பரம் நகர அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் என்.கலியமூா்த்தி, கே.என்.பன்னீா்செல்வம், ஏ.முத்துக்குமரன், ராணி, பி.அம்பிகாபதி, சிதம்பரநாதன், காசிநாதன் ஆகியோா் நகராட்சி ஆணையாளா் த.மல்லிகாவை சந்தித்து அளித்த மனு விவரம்:
கோடைகாலம் என்பதால் குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தெருக்களில் குடிநீரில் சாக்கடை நீா் கலந்து வருவதை தடுத்து, பொதுமக்களுக்கு தூய குடிநீா் வழங்க வேண்டும்.
சிதம்பரம் நகர பேருந்து நிலையத்தில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பயணிகள் நிற்பதற்கோ, அமருவதற்கோ கூரை ஏதுமின்றி சிரமப்படுகின்றனா். இதை போக்கிட வேண்டும். உயா்த்தப்பட்ட வரி விதிப்பை குறைக்க வேண்டும். புதை சாக்கடை திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.2,400 வசூலிப்பதை பாதியாக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.