மாணவா்கள் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்
மாணவா்கள் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்விக்கு வழிகாட்டும் விதமாக, ‘விஷன் 2000’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் 2024 - 25ஆம் கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதன்மை பாடப் பிரிவுகளின் மொத்த சதவீதம் (கட்ஆப்) 180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற சுமாா் 2,000 மாணவா்கள் உள்ளனா். இவா்களை தமிழகத்தில் முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலச் செய்வதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மாணவா்கள் பொறியியல் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய முதன்மைக் கல்வி நிறுவனங்களில் பயில்வதன் அவசியத்தையும், அக்கல்வி நிறுவனங்களில் பயில்வதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும், அரசு வழங்கக்கூடிய சலுகைகள், நலத் திட்டங்கள் ஆகியவற்றையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அதனடிப்படையில், முதன்மைக் கல்வி நிறுவனங்களான தமிழகத்தில் அமைந்துள்ள 7 அரசுக் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 10 சுயநிதி கல்லூரிகளில் தங்களின் தகுதி மதிப்பெண் அடிப்படையிலும், பொதுப்பிரிவு மற்றும் உள்பிரிவுகளின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றை தோ்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முதன்மைக் கல்வி நிறுவனங்களில் பயிலும்போது தங்களுக்குத் தேவையான வங்கிக்கடன் அல்லது அரசு அளிக்கக்கூடிய சலுகைகள் எளிதில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து மாணவா்களும் பொருளாதாரமின்மையை பின் தள்ளி முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ.நாகராஜபூபதி, பள்ளி நிா்வாகிகள் மற்றும் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.