திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா...
தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள்! -ப.சிதம்பரம் கருத்துக்கு பாஜக எதிர்வினை
புது தில்லி: ’இந்தியா’ கூட்டணிக்கு எதிர்காலம் சிறப்பாக இல்லை என்றும், தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் முக்கிய நிறுவனங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பேசியிருக்கிறார். இதற்கு பாஜக தரப்பிலிருந்து எதிர்வினையாற்றப்பட்டுள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவொன்றில் வியாழக்கிழமை(மே 15) கலந்துகொண்டு ப. சிதம்பரம் பேசுகையில், ”இந்தியா கூட்டணி எளிதில் உடையக்கூடிய நிலையில்தான் உள்ளது”.
“இப்போதும் காலதாமதமாகிவிடவில்லை; இந்த கூட்டணியை மறுசீராய்வு செய்து வலுப்படுத்தலாம். அதற்கு நேரமும் இருக்கிறது” என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்தால் தாம் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், தற்போது இந்த கூட்டணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது என்ற கவலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாஜக வலுவான, ஒருங்கிணைந்த சக்தியாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
“என்னுடைய அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், எந்தவொரு அரசியல் கட்சியும் இப்படி இருந்ததில்லை.
இது வெறுமனே ஒரு அரசியல் கட்சியல்ல - ஒரு இயந்திரம், அதனையடுத்தொரு இயந்திரம்.. இப்படியொரு சக்கரப் பின்னணியில் செயல்பட்டு, நாட்டின் முக்கிய நிறுவனங்களை கட்டுப்படுத்தி வருகின்றன.
அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் தேர்தல் ஆணையம் தொடங்கி காவல் நிலையம் வரை அடக்கம்”.
“இந்தச் சுழலில் இந்தியா கூட்டணி இப்போது எதிர்கொள்வது ஒரு அரசியல் எதிரியை அல்ல, மாறாக அனைத்து துறைகளிலும் சவால் விடுகிற, பலம் வாய்ந்த ஒரு சக்தியை எதிர்கொள்கிறோம்.
இந்தநிலையில், 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது” என்று பேசியுள்ளார்.
சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி இன்று(மே 16) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “காங்கிரஸுக்கு எதிர்காலம் என்பது இல்லவே இல்லை. ராகுல் காந்தியின் மிக நெருங்கிய வட்டாரங்களுக்குக்கூட இது தெரிந்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.