Thug Life: `நீயா? நானா?' - `தக் லைப்' பட டிரெய்லர் க்ளிக்ஸ் | Photo Album
ஹாட்ரிக் பாராட்டு: டூரிஸ்ட் ஃபேமலி படத்திற்காக சசிகுமாரை புகழ்ந்த ரஜினி!
டூரிஸ்ட் ஃபேமலி படத்தில் நடித்ததற்காக நடிகர் சசிகுமாரை நடிகர் ரஜினி பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே. 1ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் கூடுதல் திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலைக் கடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைப் பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி வரும் நிலையில் நடிகர் ரஜினியும் இதில் இணைந்துள்ளார்.
அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி என ஹாட்ரிக் (மூன்று) பாராட்டை ரஜினியிடமிருந்து பெற்றது குறித்து நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சசிகுமார் கூறியதாவது:
’படம் சூப்பர்’ என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். ‘அயோத்தி’, ‘நந்தன்’ படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து, “சூப்ப்ப்பர் சசிகுமார்…” என அழுத்திச் சொன்னார்.
“தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல, அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீப காலமாக உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்…” என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்… எனப் பதிவிட்டுள்ளார்.
#TouristFamily#SuperStar#Rajinikanth sirrr pic.twitter.com/jzYvGe5XlR
— M.Sasikumar (@SasikumarDir) May 16, 2025