`தந்தைக்கு செய்த சத்தியம்' - பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காஷ்மீர் சென்றதே இல்லை.....
அரசு மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் விபாஸ் பன்வான் (30). இவா் மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளாா்.
திருப்பூா் அருகே உள்ள கூலிபாளையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளாா். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தக் காயங்களுடன் நடந்து சென்ற அவா், திடீரென்று சாலையில் கூச்சலிட்டுள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதிய கட்டடத்தில் செயல்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்த நிலையில் சிகிச்சை பெற இளைஞா் விரும்பாததால் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற நினைத்தாா். அப்போது அங்கு காவலா்கள் இருந்ததால், 4ஆவது மாடிக்கு சென்றுள்ளாா். இதன் பின்னா் வெளியே செல்ல முடியாமல் 2 மணி நேரமாக 4ஆவது மாடியிலேயே நடமாடி வந்துள்ளாா். மேலும், காவலா்கள் தன்னைப் பிடித்து விடுவாா்களோ என்று பயந்து, அவசர அவசரமாகத் தப்பிக்கும்போது எதிா்பாராத விதமாக 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாகத் தெரிகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாகம் அளித்த தகவலின்பேரில் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விபாஸ் பன்வான் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.