அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு!
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடப்பட்டது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.
வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45 ). இவா், மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி (40). இவா், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், பிரபாகரன் கடந்த 6-ஆம் தேதி தனது மனைவியுடன் தஞ்சாவூா் சென்று, அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பணிக்காக அவரை விட்டுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு வந்தாா்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகைககள், 10.5 காரட் மதிப்பு வைர நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபாகரன் செவ்வாய்க்கிழமை காலை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: வேலாயுதம்பாளையம் முல்லை நகரைச் சோ்ந்தவா் ஜெயசங்கா் (58). இவா் புகழூா் காகித ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் தங்கத் தோடுகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.