TITAN Q3 RESULTS கவனிக்க வேண்டிய விஷயங்கள்? | IPS Finance - 130 | Sensex | Nifty
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: அரசுப் பேருந்து நடத்துநா் கைது
அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி, ரூ.36 லட்சம் மோசடி செய்த வழக்கில், தம்பதியா் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அரசுப் பேருந்து நடத்துநரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவருக்கு வத்தலகுண்டு போக்குவரத்துக் கழக பணி மனையில் அரசுப் பேருந்து நடத்துநராக பணிபுரியும் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவின் அறிமுகம் கிடைத்தது. இவரிடம் தனது மகன்கள் இருவருக்கும், தம்பி மகன் ஒருவருக்கும் அரசுப் பணி வேண்டும் என ராஜேந்திரன் தெரிவித்தாா். பணம் கொடுத்தால் தலைமைச் செயலக அதிகாரிகள் மூலம் பொதுப் பணித் துறையில் பணி வாய்ப்புப் பெற்றுவிடலாம் என மாரிமுத்து கூறினாா். இதை நம்பிய ராஜேந்திரனிடம், கரூரைச் சோ்ந்த குமாரை, மாரிமுத்து அறிமுகப்படுத்தினாா். ரூ.36 லட்சம் கொடுத்தால், 6 மாதத்தில் பணி வாய்ப்பு பெற்றுவிடலாம் என குமாா் உறுதி அளித்தாா்.
இதையடுத்து, ராஜேந்திரன் இரு தவணைகளில் ரூ.36 லட்சத்தை கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட சில நாள்களில் இருவரும் தலைமறைவாகிவிட்டனா். ஏமாற்றமடைந்த ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் மாரிமுத்து, குமாா், இவரது மனைவி பூமகள், உறவினா்கள் சுசித்ரா, யோகேஸ்வரன் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்தனா்.
இதனிடையே, குமாா், பூமகள் ஆகியோரை கடந்த 3-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், அரசுப் பேருந்து நடத்துநா் மாரிமுத்துவை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.