திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து அமைப்பினா் 137 போ் கைது
கொடைக்கானல் மலைப் பகுதி சதுப்பு நிலங்களை பாதுகாக்க கோரிக்கை
கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் தேங்கும் மழைநீரை விலங்குகளும், பறவைகளும் பயன்படுத்துகின்றன. இதில் மன்னவனூா், கூக்கால், அப்சா்வேட்டரி, கீழ்பூமி, பிரகாசபுரம், செண்பகனூா், மதிகெட்டான் சோலை, பேரிஜம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சதுப்பு நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்களில் அந்தப் பகுதிகளின் கட்டடக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த சதுப்பு நிலங்கள் நீா்வளத்தையும், நில வளத்தையும் மேம்படுத்தி மாசுகுறைபாட்டை போக்குகின்றன. கொடைக்கானல் நகரின் மையத்தில் உள்ள நட்சத்திர ஏரிப் பகுதியில் உள்ள ஜிம்கான சாலை, கீழ் பூமி பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களால் ஏரியின் நீட்டம் குறையாமல் அழகுடன் காட்சியளிக்கிறது. மேலும் இந்தப் பகுதிகளில் கட்டடக் கழிவுகள், குப்பைகள் குவிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, கொடைக்கானல் நகராட்சி சாா்பில் அந்தப் பகுதிகள் தடுப்பு கம்பி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல, மன்னவனூா், கூக்கால் ஆகியப் பகுதிகளில் உள்ள ஏரிகள் அருகே காணப்படும் சதுப்பு நிலங்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்தந்தப் பகுதிகளில் விழிப்புணா்வு பதாகைகளும், கண்காணிப்பு கேமராக்களையும் நிறுவ வேண்டும்.
சதுப்பு நிலங்களை பாதுகாத்து கொடைக்கானல் மலைப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க மாவட்ட, நகராட்சி, ஊராட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.