சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
காட்டு யானையை விரட்ட வந்த கும்கிக்கு மதம் பிடித்ததால் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பிவைப்பு
கோவை அருகே ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சுயம்பு கும்கி யானைக்கு மதம் பிடித்ததையடுத்து, அந்த யானை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மருதமலை, தடாகம், வரப்பாளையம் உள்ளிட்ட மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை இப்பகுதியிலுள்ள விளைநிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்து கடந்த சில மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, இந்த யானை தாக்கி ஒருவா் உயிரிழந்ததையடுத்து, அந்த யானையை வனத்துக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிக்கமுத்தி முகாமில் இருந்து முத்து, சுயம்பு ஆகிய இரண்டு கும்கி யானைகள் கோவைக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த இரண்டு யானைகளும் மருதமலையில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை உள்ள வனத்தை ஒட்டிய பகுதியில் அந்த ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், சுயம்பு கும்கி யானைக்கு மதம் பிடிக்கத் தொடங்கியது தெரியவந்தது. இதையடுத்து, வனக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி சுயம்பு கும்கி யானை லாரி மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு திங்கள்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒற்றை யானையை விரட்டுவதற்காக அழைத்து வரப்பட்ட சுயம்பு கும்கி யானைக்கு மதம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒற்றை யானையை விரட்டும் பணியில் வரப்பாளையம் பகுதியில் முத்து கும்கி யானை மட்டுமே ஈடுபட்டுள்ளது.
கூடுதல் கும்கி யானை தேவைப்பட்டால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள வேறொரு யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைப்போம் என்றனா்.