மொழி ஆதிக்கம், நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் புகார்
நமது சிறப்பு நிருபர்
ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் நாடாளுமன்ற அவையைக் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மை மொழி பிரதிநிதிகள் அதை அனுதிக்க மாட்டார்கள் என்று மக்களவையிலும், நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு தென் மாநிலங்களவை பாரபட்சமாக நடத்துவதாக மாநிலங்களவையிலும் தமிழக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசியது: உலக மக்கள்தொகையில் 20 சதவீத மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா உலக வர்த்தகத்தில் 2 சதவீதத்தை மட்டுமே தன் பங்காகக் கொண்டிருக்கிறது. சேவைத் துறையில் 4.6 சதவீதமும், உலக சுற்றுலாத் துறையில் 1.5 சதவீதமும் மட்டுமே நம்முடைய பங்காக இருக்கிறது. நம்முடைய இந்தப் பின்தங்கிய நிலைக்கு நாம்தான் காரணம்.
டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட மறுத்தபோது, தொடர் போராட்டத்தை 77 நாள்கள் நடத்தி அத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ததாக சொல்ல வைத்தோம். ஆனால், குடியரசுத் தலைவர் தனது உரையிலேயே அரியவகை கனிமங்களை தனியாருக்கு தருவோம் எனக் குறிப்பிடுகிறார். ஒரு அரிட்டாபட்டியை நாங்கள் காப்பாற்றிவிட்டோம்; அதற்குப் பதிலாக இந்தியாவில் பல அரிட்டாபட்டிகளை உருவாக்குவோம் என்று அரசு சொல்கிறது.
சட்டப்பேரவையில் இருந்து அதிகமாக வெளிநடப்பு செய்பவர்களாக மாநில ஆளுநர்கள் இருக்கிறார்கள். பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெளியே போனால்தான் அது வெளிநடப்பு. இந்த அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் வெளியேறினால்தான் அது வெளிநடப்பு. தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்து வெளியேறும் ஆளுநரின் அறியாமையை எப்படிப் போக்குவது என்று தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.
அரசியல் சாசனத்தின் 75 -ஆவது ஆண்டை முன்னிட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைத்து நடத்தப்பட்ட கூட்டுக் கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் அரசியல் சாசனத்தினுடைய முகப்புரையை ஹிந்தியிலேயே வாசித்தார். ஹிந்தி தெரியாத பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் திகைத்துப் போய் நின்றோம். இது இந்தியாவின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் சவால். ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் இந்த அரங்கத்தை கொண்டுவர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மையான இந்திய மொழிகளின் பிரதிநிதிகள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றார் சு.வெங்கடேசன்.
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசியது: "ஒரே நாடு; ஒரே வரி' என்ற உணர்வோடு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலாக்கப்பட்டதால், நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களும் பயனடைந்துள்ளதாக இந்த அரசு சொல்கிறது. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி செலுத்தப்பட்டால் மத்திய அரசின் வரிப் பகிர்வின் மூலம் மாநிலத்துக்கு கிடைப்பதோ வெறும் 29 காசுதான். ஆனால், அதே ஒரு ரூபாயைக் கொடுத்துவிட்டு 2.73 ரூபாயை வரிப் பகிர்வாக பாஜக ஆளும் உத்தர பிரதேசம் பெறுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்காக தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துக்கொண்டு, "பிஎம் ஸ்ரீ' பள்ளிகளைத் திறக்க ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டால்தான் அந்த நிதியை விடுவிப்போம் என்று மிரட்டுகிறது மத்திய அரசு.
தேசியய கல்விக் கொள்கையை இந்த அரசு அறிமுகம் செய்யும் முன்பே, அதன் பல அம்சங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி விவகாரத்தில் இப்படி ஒருதலைபட்சமாக நடந்துகொண்டு ஒரு மாநில அரசை மிரட்டுவது, அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் சிதைப்பதாகும். அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் மத்திய அரசு இப்படி நடந்துகொள்வதுதான் வேதனையானது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது என்பதைக்கூட உணர மறுக்கிறது மத்திய அரசு என்றார் கனிமொழி சோமு.