கோதுமை உற்பத்தி தேவை தொடர்பான கேள்வி: மத்திய அமைச்சர் பதிலில் திமுக எம்.பி. அதிருப்தி
நமது சிறப்பு நிருபர்
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள கோதுமை தேவையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உரிய பதிலளிக்கவில்லை என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், "தமிழகத்தின் தற்போது கோதுமைக்கான ஒதுக்கீடான மாதம் ஒன்றுக்கு 8,500 டன் என்பதை 20,000 டன் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு உணவு மற்றும் நுகர் பொருள் வாணிப கழகம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா?' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, "உணவுப்பொருள் வழங்குதலுக்கும், ஒதுக்கீடு செய்வதற்கும் உள்ள விகிதத்தின் படி தமிழகத்துக்கு கோதுமை வழங்கப்படும்' என்று கூறினார்.
அமைச்சரின் இந்தப் பதில் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று ராஜேஷ்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.