இன்று தில்லி பேரவைத் தேர்தல்
தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.
மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டன.
1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதன்கிழமை காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.
சுமார் 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
கேஜரிவால், அதிஷி மீது வழக்கு: கால்காஜி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளரும், முதல்வருமான அதிஷி மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தில்லி போலீஸôர் செவ்வாயக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல், தில்லி மக்களுக்கு விஷம் கலந்த யமுனை நீரை ஹரியாணா அனுப்பி வருவதாக பிரசாரத்தின்போது ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் கேஜரிவால் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்காக பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஷாஹாபாத் காவல் நிலையத்தில் கேஜரிவால் மீது செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (பிப்.8) எண்ணப்பட உள்ளன.
ஈரோடு கிழக்கு: இன்று வாக்குப் பதிவு
ஈரோடு, பிப். 4: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு புதன்கிழமை (பிப். 5) நடைபெறுகிறது.
இருமுனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 13 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 31 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 2023 இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளதாலும், பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்ற வாக்குகளைவிட கூடுதலாகப் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த 2023 இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10,827 வாக்குகள் பெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் அதைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று மற்ற கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை பிப். 8-ஆம் தேதி நடைபெறுகிறது.