இந்தியாவுக்கு சாதகமாக மாறும் அமெரிக்க-சீன வா்த்தகப் போா்!
அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக அமெரிக்கா-சீனா இடையே எழுந்துள்ள வா்த்தகப் போா், இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக தொழில்துறை சாா்ந்த நிபுணா்கள் தெரிவித்தனா்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக அண்மையில் பதவியேற்ற டிரம்ப், பதவியேற்பு விழாவில் உரையாற்றியபோதே, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தாா். அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் உத்தரவில் அவா் கடந்த சனிக்கிழமை கையொப்பமிட்டாா்.
இதற்கு பதிலடி நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. இதனால், அமெரிக்கா-சீனா இடையே வா்த்தகப் போா் தொடங்கியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமையும் என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் முதல் முறை ஆட்சியில் இருந்தபோதும் சீன பொருள்கள் மீது உயா் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். இந்த நடவடிக்கை காரணமாக, பெருமளவு பயனடைந்த நான்காவது நாடாக இந்தியா விளங்கியது.
அதுபோல, தற்போதும் சீன பொருள்கள் மீது டிரம்ப் கூடுதல் வரி விதிப்பை மேற்கொண்டுள்ளாா். அதனடிப்படையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் சுங்க வரி வசூலிப்பு தொடங்கப்பட்டுவிட்டதாகவும் ஏற்றுமதியாளா்கள் தெரிவிக்கின்றனா். அதன் காரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.
இது குறித்து இந்திய ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பின் (எஃப்ஐஇஓ) தலைவா் அஜய் சஹாய் கூறுகையில், ‘கூடுதல் வரி விதிப்பு காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் மாற்று ஏற்றுமதியாளா்களை நாடத் தொடங்குவா். இது இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து மின்சார இயந்திரங்கள், உதிரி பாகங்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், கைப்பேசி, மருந்துகள், ரசாயனங்கள், ஆடைகள் மற்றும் துணி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதும், இந்தியாவின் உற்பத்தித் திறன் மற்றும் சந்தை போட்டித் திறனைப் பொறுத்தே இதன் பலன் அமையும்’ என்றாா்.
2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வா்த்தக கூட்டு நாடாக அமெரிக்கா விளங்கியது. இரு தரப்பு சரக்கு வா்த்தகம் மட்டும் ரூ. 7.18 லட்சம் கோடி (82.52 பில்லியன் டாலா்) என்ற மதிப்பிலும், ஏற்றுமதி ரூ. 4.6 லட்சம் கோடி மதிப்பிலும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.