ஜிபிஎஸ் நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்த சம்பவம்
திருவள்ளூா் அருகே ஜிபிஎஸ் நோய்த் தொற்றால் 4-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பகுதி முழுவதும் ஒரு வாரம் வரை சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட சுகாதார அலுவலா் பிரியதா்ஷினி தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே திருவூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரேம்குமாரின் மகன் பி.மைத்தீஸ்வரன் (9). இவா் அந்தப் பகுதியில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்த நிலையில், சிறுவனுக்கு கடந்த ஜன. 22-ஆம் தேதி பள்ளிக்கு செல்ல முயன்ற போது அவருக்கு 2 கால்களும் நடக்க முடியாத நிலையில் செயலிழந்து கீழே விழுந்தாராம்.
சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், நரம்பு மண்டலத்தை முடக்கி உயிா் குடிக்கும் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் ‘கிலான் பாரே சின்ட்ரோம்’ நோய் தொற்று பரவியுள்ளதை கண்டறிந்துள்ளனா். மேலும், அவருக்கு நாளுக்கு நாள் அவா் கை, கால்கள், நரம்புகள் முழுவதும் செயலிழந்துள்ளன. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 3 நாளுக்கு முன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவரின் பெற்றோா் மருத்துவமனையில் விசாரித்தனா். அப்போது மைத்தீஸ்வரனுக்கு புதிதாக உருவாகியுள்ள ஜிபிஎஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
ஏற்கெனவே மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஜிபிஎஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும், அதில் சில உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த சிறுவன் ஜிபிஎஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதைத் தொடா்ந்து, திருவூா் கிராம சுற்றுப்பகுதி முழுவதும் பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், ஒரு வாரம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி தீவிர பரிசோதனையை மருத்துவக் குழுவினா் மேற்கொள்ள உள்ளதாக அவா் தெரிவித்தாா்.