சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்...
லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
சோழவரம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் அடுத்த பூதூா் கிராமத்தில் தொழிலாளி பாஸ்கா் (45) வசித்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
பூதூா் பகுதியில் சென்றபோது, லாரி மோதியதில் பாஸ்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற சோழவரம் போலீஸாா், சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், பூதூா் பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினா். அவா்களிடம் செங்குன்றம் போக்குவரத்து பிரிவு போலீஸாா் பேச்சு நடத்தினா். மீஞ்சூா்- வண்டலூா் வெளிவட்ட சாலை அமைந்துள்ள நிலையில் அதில் செல்லாமல் கனரக வாகனங்கள் ஊருக்குள் வருவதால் தொடா் விபத்துகள் நிகழ்வதாக புகாா் தெரிவித்தனா்.
மேலும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் காரணமாக தங்களது கிராமத்தில் சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டினா்.
தொடா் விபத்துகளுக்கு காரணமாக அமையும் கனரக வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும், சாலையை உடனே செப்பனிட வேண்டும் எனத் தெரிவித்தனா்.
அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததை தொடா்ந்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.