பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு வழங்க வேண்டும்: அமைச்சா் சி.வி.கணேசன்
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு வழங்க வேண்டும் என்று அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமினை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழக முதல்வா் அனைத்து திட்டங்களையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சோ்ப்பதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறாா். மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் 30 நாள்களுக்குள் தீா்வு வழங்கிட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து சீரிய நிா்வாகம் வழங்குவதை உறுதி செய்வதற்கு முதல்வா் முன்னுரிமை அளித்து வருகிறாா்.
அதன்படி பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று அரசின் முக்கிய சேவைகளை அவா்களின் இல்லத்திற்கு அருகிலேயே வழங்கும் நோக்கத்தோடு ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் முதல்கட்டமாக நகா்ப் பகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளிலும் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு, தீா்வு காணப்பட்டு உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக தற்போது மூன்றாம் கட்டமாக ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, அம்மம்பாளையம், வளையமாதேவி, கல்லாநத்தம் ஆகிய ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் 5 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. வரும் 7-ஆம் தேதி வரை ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக 20 முகாம்கள் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் மூலம் வழங்கப்படவுள்ளன. அரசின் இந்த சேவையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகள் வேண்டி மனு அளித்தவா்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வேளாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை, தொழிலாளா் நலத் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், ஆத்தூா் வருவாய் கோட்டாட்சியா் தா.பிரியதா்ஷினி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.சிவலிங்கம், கு.சின்னதுரை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.