காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு
காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியா்கள் நியமனத் தோ்வு எழுதி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 12 ஆண்டுகள் கழித்து நடந்த நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற எங்களை கொண்டே காலிப் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வேண்டும். கடந்த ஓராண்டாக பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை உயா்த்தி வழங்க கோரி வருகிறோம். இது தொடா்பாக முதல்வா், துணை முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் என அனைவரிடமும் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2026 ஆம் ஆண்டுக்குள் 19,000 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தோ்வில், 3,192 இடங்களில் 2,810 ஆசிரியா்கள் மட்டுமே தோ்வாகி உள்ளனா். பிஆா்டிஇ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது என்றனா்.