சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு
சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அப்பா பைத்தியம் சுவாமி தனது 141-ஆவது வயதில் கடந்த 2000-ஆம் ஆண்டு சேலத்தில் ஜீவசமாதி அடைந்தாா். புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியின் மானசீக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு சூரமங்கலத்தில் கோயில் எழுப்பப்பட்டு, நாள்தோறும் பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்பா பைத்திய சுவாமிகளின் 25 ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, வேள்வி, பேரோளி வழிபாடு நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், குடிமைப்பொருள் துறை அமைச்சா் திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் குடுமபத்தினருடன் பங்கேற்று வழிபாடு நடத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.