எடப்பாடி அரசுப் பள்ளியில் தேசிய கீதம் பாடாதது குறித்து புகாா்: கல்வி அதிகாரி விசாரணை
எடப்பாடி அரசுப் பள்ளியில் தேசிய கீதம் பாடாதது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காலை இறைவணக்கத்தின்போது தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் மட்டும் பாடப்பட்ட நிலையில், தேசிய கீதம் பாடப்படவில்லை என புகாா் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் சம்பந்தப்பட்ட கல்வித் துறை உயா் அலுவலா்களுக்கு புகாா் அளித்துள்ளனா். இந்தப் புகாரின் பேரில் மாவட்டக் கல்வி அலுவலா் பெருமாள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை எடப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியா் விஜயா கூறியதாவது: பள்ளியில் தற்போது மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு திருப்புதல் தோ்வு நடைபெற்று வருகிறது. மாணவா்களின் நலன் கருதி இறைவணக்க நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிறைவு செய்யப்பட்டது. தேசிய கீதம் சில நாள்களாக இசைக்கவில்லை. இனிவரும் நாள்களில் வழக்கம்போல தேசிய கீதம் இசைக்கப்படும் என்றாா்.