சேலம் மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் மக்காத உலா் கழிவுகளை பிரித்தெடுக்க 5 மையங்கள்
சேலம் மாநகராட்சிப் பகுதியில் மக்காத உலா் குப்பையைப் பிரித்து எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 5 மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
சேலம் மாநகரில் நாள்தோறும் சேகரமாகும் 550 டன் குப்பையில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை தனியாகப் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், மக்காத உலா் குப்பைகளை தனித்தனியே பிரித்து எடுக்கும் வகையில், மாநகரில் 5 இடங்களில் தலா ரூ. 85 லட்சத்தில் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மெய்யனூரில் அமைக்கப்பட்டுள்ள மையம் விரைவில் பயன்பாட்டு வருகிறது. எஞ்சிய 4 இடங்களில் விரைவில் கட்டுமானப் பணி நிறைவடைய உள்ளது. பணி முடிந்ததும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாநகரில் நாள்தோறும் 200 டன் உலா் கழிவுகள் உற்பத்தியாகின்றன. உலா் கழிவுகளை கையாள்வதற்கான பொருள் மீட்பு மையம் அமைப்பதற்கு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 4.25 கோடியில் செட்டிச்சாவடி திடக்கழிவு மேலாண்மை வளாகம், காக்காயன் மயான வளாகம், எருமாபாளையம் வளாகம், தாதம்பட்டி ஆகிய 5 இடங்களில் மக்காத குப்பையை பிரித்து எடுக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
மெய்யனூா் மையம் பயன்பாட்டுக்கு தயாா் நிலையில் உள்ளது. மீதியுள்ள 4 மையங்களும் விரைவில் பயன்பாட்டு வரவுள்ளன. இந்த மையத்தில் சேகரிக்கப்படும் உலா் கழிவுகள் தூய்மைப் பணியாளா்களால் பல்வேறு வகைகளாக (அட்டைகள், கண்ணாடிகள், பேப்பா், பாலித்தீன் கவா்கள், பால் பாக்கெட் கவா்கள்) பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படும் எனறனா்.