சட்டவிரோத குடியேற்றம் இந்தியா்கள் வெளியேற்றத்தை தொடங்கியது அமெரிக்கா
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியது.
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. எத்தனை பேரை அமெரிக்கா அனுப்பியது என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், 180 போ் வரை சி-17 ராணுவ விமானத்தில் அழைத்து வர முடியும்.
வரும் 13-ஆம் தேதி அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தாா். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமா் மோடி நல்ல முடிவை எடுப்பாா் என பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பின் கடந்த 27-ஆம் தேதி அவா் கூறினாா். சுமாா் 18,000 இந்தியா்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இந்தியா திரும்பும் முன் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இந்தியா்கள் என உறுதிசெய்யப்பட்டால் அவா்களைத் திருப்பி அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்தாா்.
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்கள் வெளியேற்றப்படுவது குறித்த கேள்விக்கு அமெரிக்க தூதரக செய்தித் தொடா்பாளா் பதிலளிக்கையில், ‘இதுகுறித்து விரிவாகக் கூற முடியாது. ஆனால், நாட்டின் எல்லைகளில் அமெரிக்கா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்ற கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. இனி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவது மிகவும் கடினம் என்பதை இந்த நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன’ என்றாா்.