அனுமதியின்றி அரசு மதுப்புட்டிகளை வைத்திருந்த இருவா் கைது
ஆத்தூா் ஊரக காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி அரசு மதுப்புட்டிகள் மற்றும் கள்ளச்சாராயம் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆத்தூரை அடுத்த வளையமாதேவியில் அரசு மதுக் கடை உள்ளது. இந்தக் கடையின் அருகில் திமுக ஒன்றிய வா்த்தக அணி அமைப்பாளா் ஜோதிவேல் (45) என்பவா் அனுமதி பெறாத மதுக்கூடம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவா் கூடுதலாக நரசிங்கபுரத்தில் உள்ள மதுக்கடை அருகில் மதுக்கூடம் நடத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வந்துள்ளாா். இந்த நிலையில் அதே இடத்தில் ஆத்தூா் நகா்மன்ற மூன்றாவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினா் சாந்தியின் கணவா் முருகேசன், நகர திமுக 18 ஆவது வாா்டு செயலாளா் ரவி (எ)பாம்பு ரவி (43) ஆகியோா் மதுக்கூடம் நடத்தி வந்தனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து ரவி, இளங்கோ மன்னன் (40) ஆகியோா் ஒன்று சோ்ந்து ஜோதிவேல் நடத்தி வரும் அனுமதி இல்லாத மதுக்கூடத்தில் மதுப்புட்டிகள், சாராயப் பாக்கெட்டுகளை மூட்டைக் கட்டி போட்டவிட்டு விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜோதிவேல் மீது ஆத்தூா் மதுவிலக்கு போலீஸாரும், ரவி மீது ஆத்தூா் ஊரக போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.