திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து அமைப்பினா் 137 போ் கைது
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம்: அமைச்சா் இ. பெரியசாமி
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அனைத்துத் துறைகளிலும் முதல் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாடு உயா்ந்த நிலைக்கு செல்லக் கூடாது என்ற குறுகிய நோக்கில் தான் இதுபோன்று புறக்கணிப்பு செய்கின்றனா்.
ஊரக வளா்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ரூ.86 ஆயிரம் கோடியாக குறைத்து விட்டனா். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு சுமாா் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதியை குறைத்துவிட்டனா். இதன் மூலம் இந்த ஆண்டில் ஊரக வளா்ச்சிக்கு மேலும் நிதி குறைந்துவிடும்.
ரயில்வே திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டம் என பல்வேறு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு எந்தத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டில் நாள்தோறும் 9 லட்சம் பேருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக இந்த வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு தொடா்ந்து வழங்கி வருகிறது. ஆனால், மத்திய அரசுக்கு இதில் அக்கறை இல்லை என்றாா் அவா்.