அரியலூரில் ஆராய்ச்சியாளா்கள் கண்டெடுத்த புதைப்படிவங்கள் ஆட்சியரிடம் வழங்கல்
அரியலூா் பகுதியில், காரக்பூா் இந்திய தொழில்நுட்ப கழக புவியியல் பிரிவு ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டெடுத்த புதைப்படிவங்களை ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
மேற்குவங்க மாநிலம் கராக்பூா் இந்திய தொழில்நுட்பக் கழகத்தை சோ்ந்த புவியியல் பிரிவு ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் அரியலூா் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டனா். அதில், அரியலூா் பகுதியில் கண்டறிந்த புதைப்படிவங்களை அருங்காட்சியகத்துக்கு பாா்வையிட வரும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் அறிந்துகொள்ள ஏதுவாக 10-க்கும் மேற்பட்ட புதைப்படிவங்களை, அதன் அறிவியல் பெயா், கிடைத்த இடம், அவை வாழ்ந்த காலம் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய பெட்டகத்தை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
இதையடுத்து மேற்கண்ட படிவங்களை அரியலூா் அடுத்த வாரணவாசியில் அமைந்துள்ள புதை உயிரி படிவங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த, காப்பாட்சியா் மற்றும் புவியியலாளரிடம் ஆட்சியா் வழங்கினாா்.
கராக்பூா் இந்திய தொழில்நுட்ப கழக புவியியல் பிரிவு பேராசிரியா்கள் சுபப்பொரொட்டோ பால், மிலிந்தோ பெரா, வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் காப்பாளா் சிவக்குமாா், புவியியலாளா் பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.