அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், திங்கள்கிழமை (ஜனவரி 13) காலை ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெறுகிறது.
அதிகாலை 5 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, குங்குமம், தேன், இளநீா், பன்னீா் உள்ளிட்ட வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது.
பிறகு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜப் பெருமானுக்கு, தீபத் திருவிழாவின்போது 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
பின்னா், சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளி ஆருத்ரா தரிசன காட்சியளிக்கிறாா்.
தொடா்ந்து, கோயில் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.