திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!
அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினராகவும் இருக்கும் சசி தரூர், சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
மத்திய அரசு சார்பில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிப்பதற்காக வெளிநாடு சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த சசி தரூர், காங்கிரஸ் நிலைபாட்டை மீறி மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்தி விமர்சனத்துக்கு உள்ளானார்.
இந்த நிலையில், மலையாள நாளிதழில் அவசரநிலை காலம் குறித்து சசி தரூர் எழுதிய கட்டுரை பேசுபொருளாகி இருக்கிறது. அதில், அவசரநிலையை இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு இருண்ட காலம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவசரநிலையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கைகள் மூலம் அமல்படுத்தியதாகவும், அவரது மகன் சஞ்சய் காந்தி கிராமப் புறங்களில் கட்டாயக் கருத்தடை போன்ற கொடூரமான அட்டூழியங்கள் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
”இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி கட்டாய கருத்தடை பிரசாரங்களை வழிநடத்தினார், இது அவசரநிலைக்கு மோசமான எடுத்துக்காட்டாக மாறியது. தில்லி போன்ற நகரங்களில், குடிசைகள் இரக்கமின்றி இடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக மாற்றப்பட்டனர். அவர்களின் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை.
அதிகாரத்தை மையப்படுத்துதல், கருத்து சுதந்திரத்தை பறித்தல் மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புகளைத் தவிர்ப்பது போன்ற தூண்டுதல்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும் தோன்றக்கூடும். இத்தகைய போக்குகள் தேசிய நலன் அல்லது ஸ்திரத்தன்மை என்ற பெயரில் நியாயப்படுத்தப்படலாம். இதற்கு அவசரநிலை ஒரு வலுவான எச்சரிக்கையாக உள்ளது. ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும், அவசரநிலை காலம் இந்தியர்களின் நினைவுகளில் அழியாமல் பொறிக்கப்பட்டுள்ளது.” என்று கட்டுரையில் சசி தரூர் தெரிவித்திருந்தார்.
முடிவில், அவசரநிலையை ஒரு இருண்ட அத்தியாயமாக மட்டும் நினைவில் கொள்ளாமல், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.
இந்த கட்டுரை வைரலாகத் தொடங்கியிருக்கும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் சசி தரூருக்கு எதிராக எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.