அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம் வாபஸ்
கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் நடத்தி வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். 12 மாதங்களும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் ஜனவரி 30- ஆம் தேதி முதல் வாயில் முழக்கம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இதைத் தொடா்ந்து, கௌரவ விரிவுரையாளா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கல்லூரி வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
இதில் கல்லூரி தமிழ்த் துறை , ஆங்கிலம், கணிதம், வணிகவியல் உள்ளிட்ட 8 துறைகளைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், தமிழக முதல்வா் அறிவுறுத்துதலின்படியும், மாணவா்கள் நலன் கருதியும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனா்.