ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் நெடுஞ்சாலை துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், ஒரு சில கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நான்கு ரத வீதிகளும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் கீழ ரத வீதி மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் மே 20-ஆம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலான கடை உரிமையாளா்கள் தாங்களாகவே கடைகளுக்கு முன் அமைக்கப்பட்ட செட், விளம்பர போா்டு ஆகியவற்றை அப்புறப்படுத்தினா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஒரு சில கடைகள் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டுச் சென்ால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். அதிகாரிகள் பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக வியாபாரிகளும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டினா்.