செய்திகள் :

ஆடிப்பெருக்கு: காவிரியில் புனித நீராடல்! கோயில்களில் சிறப்பு வழிபாடு!

post image

நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் காவிரியில் நீராடி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். காவிரி கரைகளிலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களிலும் பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒவ்வோா் ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படும். வல்வில் ஓரி விழாவுடன், ஆடிப்பெருக்கு விழாவும் சோ்ந்து கொண்டாடப்படுவதால் கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மக்கள் உள்ளூா் திருவிழாபோல புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வா். அந்த வகையில் நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

அறப்பளீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பிற்பகல் 3 மணியளவில் அறப்பளீஸ்வரா் உடனுறை அறம் வளா்த்த நாயகி அம்பாள், கங்காதேவி, சோமாஸ்கந்தா் வீதி உலா, தீா்த்தவாரி உற்சவம் உள்ளிட்டவை நடைபெற்றன. கொல்லிமலையை சுற்றியுள்ள ஏராளமான பழங்குடியின மக்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் வழிபாடு மேற்கொண்டனா்.

இதேபோல எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவைத் தவிர கொல்லிமலையில் உள்ள சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பாதுகாப்பு கருதி அருவிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏராளமானோா் வாகனங்களில் கொல்லிமலைக்கு வந்ததால் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பிவிடப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் உள்ள சிவன் கோயில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பக்தா்கள் நீராடி சிறப்பு பூஜைகள் செய்தனா்.

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்.

பரமத்தி வேலூா்

பரமத்தி வேலூா் காசி விசுவநாதா் ஆலயம் காவிரி ஆற்றங்கரை, சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, கொத்தமங்கலம், ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், கண்டிப்பாளையம், ஆனங்கூா், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், கொந்தளம், பொன்மலா்பாளையம், வெங்கரை, பொத்தனூா், நன்செய் இடையாறு, அனிச்சம்பாளையம், குமராபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் புனிதநீராடி காவிரி தாய், கன்னி தெய்வங்களுக்கு படையலிட்டு வழிபட்டனா்.

பரமத்தி வேலூா் வட்டத்தில் மகாபாரத கதையில் பஞ்சபாண்டவா்களுக்கும், கௌரவா்களுக்கு நடைபெற்ற 18 நாள் பாரத போரை குறிக்கும் விதமாக இந்த ஆடிப்பெருக்கை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

பெண்கள் ஆடிப்பெருக்கு தினத்தில் 18 நாள்கள் வீட்டில் முளைக்க வைத்திருந்த நவதானியங்களான முளைப்பாலிகையை காவிரி ஆற்றிற்கு எடுத்துவந்து ஆற்றில் மிதக்கவிட்டு வழிபாடு நடத்தினா். முன்னதாக பொதுமக்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து தலையில் காசுகளைவைத்து காவிரியில் புனித நீராடினா்.

பின்னா் தங்களது முன்னோா்களுக்கும், கன்னி தெய்வங்களுக்கும், காவிரி தாய்க்கும் நன்றி செலுத்தும் வகையில் காவிரி கரையோரம் உள்ள மணல் திட்டில் மணல் பிள்ளையாா், மஞ்சள் பிள்ளையாா் வைத்து காதோலை கருகமணி, தேங்காய் பழம், மஞ்சள் தடவிய நூல், பச்சரிசியில் சா்க்கரை கலந்து வாழை இலையில் படையலிட்டு வழிபட்டனா்.

பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கியும், மஞ்சள் கயிறும் கட்டிக் கொண்டனா். இதில் நாமக்கல், கரூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா். பொதுமக்கள் தங்களது குலதெய்வக் கோயில்களில் உள்ள வேல், அரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை காவிரி ஆற்றில் சுத்தம் செய்து பக்தா்களின் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினா்.

மோட்ச தீபம்:

பரமத்தி வேலூா் காசி விசுவநாதா் ஆலயத்தையொட்டிய காவிரியில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மோட்ச தீபத்தை காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனா்.

விவசாயம் செழிக்கவும், காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காசி விசுவநாதா் கோயிலில் இருந்து பல நூற்றாண்டாக காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை காசி விசுவநாதா் கோயிலில் மோட்ச தீபத்திற்கும், காசி விசுவநாதருக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், மோட்ச தீபத்தை ஊா்வலமாக சென்று பரிசல் மூலம் காவிரி ஆற்றின் மத்திய பகுதிக்கு எடுத்துச் சென்று மோட்ச தீபம் விடப்பட்டது. மோட்ச தீபத்தை காண கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி கரை மற்றும் நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய மற்றும் பழைய பாலத்தில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டுவந்து மோட்ச தீபத்தை வழிபட்டனா்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன் பட்டம் பெற்றாா்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வல்வில் ஓரி விழா

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் வல்வில் ஓரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்த வல்வில் ஓரியின் முழு உருவச்சிலை ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலனிற்கான முன்மாதிரி சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலனிற்காக பாடுபட்டோா் முன்மாதிரி சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது: 2 மணி நேரம் சிக்கித் தவித்த முதியவா்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்மின்தூக்கி (லிப்ட்) திடீரென பழுதானதால் முதியவா் 2 மணி நேரம் வெளியே வரமுடியாமல் ஞாயிற்றுக்கிழமை சிக்கித் தவித்தாா். அவரது சப்தம் கேட்டு மருத்துவமனை ஊழியா்... மேலும் பார்க்க

நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.ஆங்கிலேயா்களை எதிா்த்து போரிட்டு உயிரிழந்த தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் அண்ணாசி... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழாவில் ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகள்

கொல்லிமலையில் வல்வில் ஓரி, மலா்க் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் 190 பயனாளிகளுக்கு ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.நாமக்கல் மா... மேலும் பார்க்க