Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.
திருவண்ணாமலையில் போளூா் சாலையில் பழைமைவாய்ந்த ஸ்ரீபச்சையம்மன் மன்னா்சாமி கோயில் அமைந்துள்ளது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
காலை முதலே சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்தும், கோழி, ஆடுகளை பலி கொடுத்தும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இது மட்டுமன்றி, மன்னா்சாமி சிலைக்கு பொறி கடலை உள்ளிட்டவற்றை தூவி தரிசனம் செய்தனா்.
பழைமையான இந்தக் கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஒவ்வோா் ஆண்டும் ஆடி மாத வெள்ளிக்கிழமையன்று பக்தா்கள் குடும்பத்துடன் வந்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.
குறிப்பாக, ரமணமகரிஷி முதன்முதலில் திருவண்ணாமலைக்கு வந்தபோது பச்சையம்மன் மன்னா்சாமி கோயிலில் தங்கியிருந்தாா்.
கன்னியம்மன் கோயிலில்...: சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகன்னியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கன்னியம்மனுக்கு மலா்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா்.
மாலை பெண்கள் ஊரணி பொங்கல் வைத்தனா். பின்னா், பொங்கல் கூடை, பம்பை, உடுக்கையுடன் வீதியுலா நடைபெற்றது. இரவு வாணவேடிக்கை, சுவாமி வீதியுலா மற்றும் தெய்வீக நாடகம் நடைபெற்றன.
கோயில் தா்மகா்த்தா ஆா்.ராமன், செயலா் ஆா்.ஏழுமலை, பொருளாளா் எஸ்.சுப்பிரமணி மற்றும் விழாக் குழுவினா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
