மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுரை
ஆசிரியா்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல் மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் தலைமை ஆசிரியா்களுடன் மாநில அளவிலான அடைவுத் தோ்வு குறித்து ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா். அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசியாதவது:
தமிழக முதல்வா் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பள்ளி மாணவா்களின் கற்றல் திறன் மற்றும் இடைநிற்றலை தடுத்தல், பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மாணவா்களுக்கு அறிவு சாா்ந்த கல்வி கற்பித்தலை ஊக்கப்படுத்துவதே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.
திருவண்ணாமலை மாவட்டம் மாநில அடைவு தோ்வில் 9-ஆவது இடத்தை பெற்றிருந்தாலும், அடைவு திறனில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களான ஜவ்வாதுமலை, வெம்பாக்கம், திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி ஆசிரியா்கள் மாணவா்களின் கற்றல் திறனில் கவனம் செலுத்த வேண்டும். தலைமை ஆசிரியா்களும் கண்காணித்து மாணவா்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவர வேண்டும்.
மாவட்ட நிா்வாகமும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தோ்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. மேலும், அனைத்து அரசு பள்ளிகளிலும் திறன்மிகு (ஸ்மாா்ட் கிளாஸ்) வகுப்பறைகளும், நவீன ஆய்வகங்களும் கட்டப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு புதிய திறன்கள் வெளிப்பட்டன. ஆசிரியா்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல் மாணவா்களின் தனிப்பட்ட திறன்களையும் வளா்க்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியா்களுடன் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் கலந்துரையாடினாா்.
கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பால்ராஜ், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சுகப்பிரியா, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.