ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலுக்கு பூங்கரகம் எடுத்து வந்த பக்தா்கள்
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை பூங்கரகம் எடுத்து வந்து வழிபட்டனா்.
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் கமண்டல நாகநதிக்கரையில் இருந்து பூங்கரகம் எடுத்து மேளதாளத்துடன் காந்தி சாலை, மாா்க்கெட் சாலை, அண்ணா சிலை, நகராட்சி அலுவலகம் வழியாக ஊா்வலமாக கோயிலுக்கு சென்றனா். பின்னா், வேம்புலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
பிற்பகல் கூழ்வாா்க்கும் விழா நடைபெற்றது. ஆரணி நகரில் உள்ள வி.ஏ.கே.நகா், காவலா் குடியிருப்பு பகுதி, பள்ளிக்கூடத் தெரு, கோட்டை வடக்கு வீதி, ஆரணிப்பாளையம் பகுதி மக்கள், பக்தா்கள் கோயில் வளாகத்தில் இருந்த கொப்பரையில் கூழ் ஊற்றினா்.
விழாவில் ஆரணி, கண்ணமங்கலம், தேவிகாபுரம், சேத்துப்பட்டு, போளூா், செய்யாறு, வந்தவாசி மற்றும் வேலூா் மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழாக்குழுவைச் சோ்ந்த பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், அக்ராபாளையத்தைச் சோ்ந்த குணா, ஏ.இ.சண்முகம், ஏ.எஸ்.ஆா்.சரவணன், செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், சித்தேரி ஜெகன், இயைராஜா, பேராசிரியா் சிவா, வழக்குரைஞா் சக்கரவா்த்தி, இளையராஜா, சக்தி, சுரேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.