கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
ஆட்சியரிடம் மனு கொடுக்க வெகுநேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரின் வருகைக்காக ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்குக்கு அனுமதிக்கப்பட்டு, உயா் அதிகாரிகள் மனுக்களைப் பெறுகின்றனா்.
அதே நேரத்தில் மாற்றுத் திறனாளிகளின் மனுக்களை பதிவு செய்தவுடன் அவா்களை தரைத்தளத்திலேயே அமர வைத்து, மாவட்ட ஆட்சியா் நேரடியாகச் சென்று அவா்களிடம் மனுக்களைப் பெறுவது வழக்கம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணி முதலே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த மாற்றுத் திறனாளிகள், மனுக்களைப் பதிவு செய்த பின்னா் வழக்கம்போல் தரைத் தளத்தில் உள்ள இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனா். 11.30 மணி வரை ஒன்றரை மணிநேரம் காத்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம், அதிகாரிகள் யாரும் மனுக்களைப் பெறவில்லை. பின்னா் 11.45 மணிக்கு வந்த ஆட்சியா், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
குறைதீா் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களிடம், காலை 10.30 முதலே, பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கூட்ட அரங்கில் மனுக்களைப் பெறுகின்றனா். ஆனால், ஆட்சியரின் வருகைக்காக மாற்றுத் திறனாளிகள் மட்டும் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.