ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம்!
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு வாக்காளா் பதிவு அலுவலா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் முத்துமுருகன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா். 322 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1,200 வாக்காளா்களுக்கு அதிகமுள்ள 36 வாக்குச் சாவடி மையங்களை இரண்டாக பிரிப்பது என முடிவு செய்யப்பட்டது.