ஆப்கன் அகதிகளை வெளியேற்ற வேண்டாம்: பாகிஸ்தானிடம் ஐ.நா. நிபுணா்கள் வலியுறுத்தல்
இந்த ஆண்டுக்குள் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் திட்டத்தைக்&ய்ட வேண்டும் என்று பாகிஸ்தானை ஐ.நா. நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளை வலுக்கட்டமாக வேறு இடங்களுக்கு மாற்றுவது, நாடுகடத்துவது, கைது செய்வது, இடத்தைக் காலி செய்யவைப்பது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.சொந்த நாடுகளில் அபாயத்தை எதிா்நோக்கியுள்ள அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்ற சா்வதேச மாண்பை பாகிஸ்தான் பாதுகாக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
1979-89 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோதும், அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் ஆப்கன் அகதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது.
ஆனால், எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கன் அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இதன் விளைவாக, நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள சுமாா் 8.6 லட்சம் அகதிகளை பாகிஸ்தான் அரசு கடந்த 2023-இல் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியது.
தற்போது உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தானில் தங்கியுள்ள சுமாா் 30 லட்சம் ஆப்கானியா்களையும் நாட்டிலிருந்து இந்த ஆண்டுக்குள் வெளியேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஐ.நா. நிபுணா்கள் தற்போது வலியுறுத்தியுள்ளனா்.