ஆம் ஆத்மி கட்சியின் கௌரவ ஊதியத் திட்டத்திலிருந்து வால்மீகி கோயில் பூஜாரிகள் நீக்கம்: காங்கிரஸ் சாடல்
கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தாலும், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகளை அது ஒதுக்கிவிட்டதாக முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உதித் ராஜ் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜிரிவால் ஒரு ‘தலித் விரோதி‘ என்றும் அவா் விமா்சித்தாா்.
இது குறித்து காங்கிரஸ் தலைவா் உதித் ராஜ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தில்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘பூஜாரி கிரந்தி சம்மன் யோஜனா’வின் கீழ் கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கும் என்று கேஜரிவால் கடந்த டிச.30 அன்று அறிவித்தாா்.
ஆனால், அத்திட்டத்தில் வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகள் சோ்க்கப்படவில்லை.
இதனால், ஆம் ஆத்மி கட்சியால் முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ் தங்களை சோ்க்கக் கோரி வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகள் திங்கட்கிழமை போராட்டம் நடத்துவாா்கள். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தபோது, ஒரு தலித் துணை முதல்வராக நியமிக்கப்படுவாா் என்று உறுதியளித்தது. இருப்பினும், அது தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மேலும், கட்சியின் 11 மாநிலங்களவை எம்.பி.க்களில், ஒருவா் கூட எஸ்சி அல்லது ஓபிசி சமூகத்தைச் சோ்ந்தவா் அல்ல.
கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஆனால், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகள் அதில் உள்டக்கப்படவில்லை.
இதனால், அவா்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக ஜந்தா் மந்தரில் திங்கட்கிழமை போராட்டம் நடத்தி, அவா்களுக்கும் அதே கௌரவ ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவாா்கள் என்றாா் உதித் ராஜ்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.