"ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 25) மாலை தொடங்கியது.
இதில், முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திமுக அமைச்சர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
திரைத்துறையிலிருந்து, வெற்றிமாறன், மிஷ்கின், மாரி செல்வராஜ், தியாகராஜா குமாரராஜா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் மேடையில் நெகிழ்ச்சியாகப் பேசினர்.
அதைத்தொடர்ந்து, 2025-26 கல்வியாண்டுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களை ஸ்டாலினும், ரேவந்த் ரெட்டியும் சேர்ந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தில், 2,65,318 பேர் பயன்பெறுவார்கள் என்றும் அதில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "இங்கு பேசிய மாணவர்களின் பேச்சைக் கேட்டு எமோஷனல் ஆகிவிட்டேன். மாணவர்களின் கருத்துக்களைக் கேட்கும்போது, நம் உழைப்புக்கான பலன் கண்முன்னே தெரிவதை உணர்ந்தேன்.
தமிழ்நாட்டின் மகளிர் பயணத்தைப் போல, தெலங்கானாவில் மகாலக்ஷ்மி திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை ரேவந்த் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதேபோல, அங்கு செயல்படுத்துகிற நல்ல திட்டங்களை இங்கு செயல்படுத்த நாங்களும் தயாராக இருக்கிறோம்.
குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும். மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். அதனால்தான் கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் கால் முளைத்த சதி, சமூகத்தை ஆட்கொண்டதால் நம்முடைய கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
வரலாறு நெடுக இந்த ஆதிக்கத்துக்கு எதிராக கலகம் செய்த புரட்சியாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதன் உச்சமாக திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் நிகழ்ச்சிய புரட்சிதான் இன்று இந்த அளவுக்கு வேகமாக நடைபோட காரணமாக இருக்கிறது.
இலவச பஸ் பாஸ், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணம் இல்லை, அனைத்து சமூகத்தினருக்கும் கல்விச்சாலைகளில் இடம் கிடைக்க இட ஒதுக்கீடு என ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம்.
இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லத்தான் கடந்த நான்காண்டுகளாக புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.
இன்று கல்வியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற வளர்ச்சியைப் பல்வேறு மாநிலங்கள் திரும்பிப் பார்க்கிறது.
நம் திட்டங்களை அவர்களுடைய மாநிலங்களில் செயல்படுத்த ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த எழுச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் கல்விக்கு தடை ஏற்படுத்தலாம் என்று ஒன்றியத்தில் நினைக்கிறார்கள்.
நம்முடைய வளர்ச்சியைப் பார்த்து ஒதுக்க முடியாமல், தடை ஏற்படுத்தக்கூடிய சிலருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.
உங்களுக்கு (மாணவர்கள்) நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான், நம் அரசு உருவாக்கி தரக்கூடிய வாய்ப்புகளையெல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உயரப் பறக்க வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக மாற்றுவோம்" என்று கூறினார்.