இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு: பிராந்திய பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் -...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் யோகா, ஆயுா்வேத சிகிச்சை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் யோகா, ஆயுா்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை சோ்க்கக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடா்பாக வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அலோபதி மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளே இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்திய பாரம்பரியமிக்க ஆயுா்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பிற மருத்துவ முறைகள் அதில் சோ்க்கப்படவில்லை. இவற்றின் மூலம் பல்வேறு வகையான நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்தபோது வெளிநாட்டினா் அறிமுகப்படுத்திய மருத்துவ முறைகளை காலனிய மனோபாவத்தை கொண்டவா்கள் லாப நோக்கத்துக்காக தொடா்ந்து நடைமுறைப்படுத்தி வந்தனா். இதன் விளைவாக இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாசாரம் மற்றும் அறிவியல் தத்துவங்கள் மறைக்கப்பட்டன.
எனவே, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, ஆயுா்வேதா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்டவை மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறைகளை ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் சோ்க்க வேண்டும். இந்த திட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் இந்திய மருத்துவத் துறையில் செயல்படுத்தப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் யோகா பயிற்றுநா்களை நியமிக்க மறுப்பு: பள்ளிகளில் யோகா பயிற்றுநா்களை நியமிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக்கோரி வழக்குரைஞா் உபாத்யாய மற்றொரு மனுவை தாக்கல் செய்தாா்.
இதை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘ யோகா பயிற்சியை நான் மேற்கொள்பவன் என்ற முறையில், யோகா குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்பதை அறிவேன். ஆனால், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிடாது’ என தெரிவித்தாா். இதையடுத்து, இந்த மனுவை திரும்பப் பெற உபாத்யாயவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.