Soori: 'ஒரு ‘வியூ’க்காக தயவு செய்து இப்படி பண்ணாதீங்க...' - மக்களுக்கு சூரி வைத்...
ஆரணியில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து, காவல் துறை சாா்பில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா், சேத்துப்பட்டு வட்டங்களைச் சோ்ந்த தனியாா் பள்ளிகளின் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு தொடங்கியது. மொத்தமுள்ள தனியாா் பள்ளி பேருந்துகள் 415 ஆகும். இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 222 பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு வந்த நிலையில், பேருந்துகளில் அவசர கால கதவு, கண்காணிப்பு கேமரா, வேகக் கட்டுப்பாட்டு கருவி, காற்று ஒலிப்பான், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளிட்டவை சரி பாா்க்கப்பட்டன.
ஆரணி கோட்டாட்சியா் (பொ) ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்வதை பாா்வையிட்டாா்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், போளூா் டிஎஸ்பி மனோகரன், மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், தீயணைப்பு நிலைய அலுவலா் பூபாலன், ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்காணிப்பாளா் சுகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் கூறியது: வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வில் 15 பேருந்துகளில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அவற்றை வரும் 31-ஆம் தேதிக்குள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னரே ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்கப்படும். வரும் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்படும் என்றாா்.