குஜராத்: ரூ.920 கோடியில் வித்லாபூர் ஆலையை விரிவாக்கும் ஹோண்டா!
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் வித்லாபூரில் இயங்கி வரும் உற்பத்தி ஆலையை ரூ.920 கோடியில் விரிவாக்கம் செய்து, நான்காவது உற்பத்தி மையத்தை உருவாக்கவிருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், இரண்டு சக்கர வாகனத்தயாரிப்பு மையத்தின் திறன் 6.5 லட்சம் வாகனங்களாக அதிகரிக்கும் என்றும், இதன் மூலம், 2027ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி திறன் 26.1 லட்சமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கப் பணிகள் மூலம், உலகிலேயே ஹோண்டா நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலையாக, வித்லாபூர் மாறவிருக்கிறது.
இந்த புதிய தொழிற்சாலை உற்பத்தி மையம் 125 சிசி திறன் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் இலக்கோடு தொடங்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் 1,800 புதிய வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், நாட்டில் மொத்தமுள்ள நான்கு உற்பத்தி தொழிற்சாலைகளின் தற்போதைய வாகன உற்பத்தியான 61.4 லட்சம் என்பது 70 லட்சம் வாகனங்கள் என்ற அளவுக்கு உயரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.