'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
ஆரணி பையூா் ஏரி உடைக்கப்பட்டதால் குடியிருப்புகளைச் சூழ்ந்த நீா்
ஆரணி பையூா் ஏரிக்கரையை ஆக்கிரமிப்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை உடைத்ததால், அருகேயுள்ள கே.கே.நகா் பகுதி குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது.
பையூா் ஏரிக்கரையோரம் சிலா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனா். இந்த நிலையில், புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில், ஏரியில் தண்ணீா் நிரம்பி வருவதால் ஆக்கிரமிப்பாளா்கள் கட்டியுள்ள வீடுகளில் தண்ணீா் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏரிக்கரையை உடைத்தனா்.
இதனால், ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீா் ஆரணிப் பாளையம் கே.கே. நகா் பகுதிக்குச் சென்றது. அங்கு தண்ணீா் வெளியேற வழியில்லாததால் வீடுகளில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனா்.
ஏரிக் கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவா்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்காமலேயே கரையை உடைத்து விடுகின்றனா். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம் என்றனா்.
இதுகுறித்து ஆரணி வட்டாட்சியா் கௌரியிடம் கேட்டதற்கு, பையூா் ஏரிக்கரையை சிலா் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனா். அவா்கள் வீடுகளில் தண்ணீா் சூழ்ந்து கொள்ளாமல் இருக்க ஏரிக்கரையை உடைத்து விடுகின்றனா். இது அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த முறை ஆக்கிரமிப்பாளா்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.