SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
தீபத் திருவிழா: காவல் தெய்வங்களின் வழிபாடு தொடக்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு, டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீதுா்க்கையம்மன் வழிபாடு:
தீபத் திருவிழாவை தொடங்குவதற்கு முன்னதாக, நகர காவல் தெய்வங்களின் வழிபாடு 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதுா்க்கையம்மன் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீதுா்க்கையம்மன் கோயில் மூலவருக்கு மாலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் துா்க்கையம்மன் எழுந்தருளினாா். உற்சவருக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனையைக் காண்பித்தனா்.
இதன்பிறகு, உற்சவா் கோயில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இன்று ஸ்ரீபிடாரியம்மன் வழிபாடு:
காவல் தெய்வங்களின் 2-ஆவது நாள் வழிபாடு திங்கள்கிழமை (டிச.2) இரவு நடைபெறுகிறது. ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் ஸ்ரீபிடாரியம்மன் சந்நிதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு உற்சவா் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
நாளை ஸ்ரீவிநாயகா் வழிபாடு:
காவல் தெய்வங்களின் 3-ஆவது நாள் வழிபாடு செவ்வாய்க்கிழமை (டிச.3) இரவு அருணாசலேஸ்வரா் கோயில் ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதியில் நடைபெறுகிறது. உற்சவா் ஸ்ரீவிநாயகா் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
தீபத் திருவிழா கொடியேற்றம்:
காவல் தெய்வங்களின் வழிபாடு செவ்வாய்க்கிழமை (டிச.3) இரவுடன் நிறைவு பெறுகிறது. இதன்பிறகு, டிசம்பா் 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் காலை 7.25 மணிக்குள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.